மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் மத்திய தொல்லியல் அதிகாரிகள் ஆய்வு நடத்தி நினைவுச் சின்னங்கள் அருகே எச்சரிக்கை பலகை அமைத்தனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சமணர் குகை மற்றும் குகை கோயில்கள் உள்ளன. இங்குள்ள குகையில் சில நாட்களுக்கு முன்பு பச்சை பெயிண்ட் அடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீஸில் பராமரிப்பு பணியாளர் ராஜன் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் திருப்பரங்குன்றம் மலையில் கடந்த இரு நாட்களாக ஆய்வு நடத்தினர். பின்னர் மலையில் உள்ள சமணர் படுகைகள் உட்பட தொல்லியல் நினைவுச்சின்னங்கள் முன்பு எச்சரிக்கை பலகைகளை இன்று நட்டனர். அந்த பலகைகளில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
அதில், 'இந்த நினைவுச் சின்னம் 1958ம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள் தொல்பொருள் ஆய்வு இடங்கள் மற்றும் எஞ்சிய பகுதிகள் சட்டத்தின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்தை அழிக்கின்றவர், அகற்றுகின்றவர், சிதைக்கின்றவர், மாற்றி அமைக்கின்றவர், இதன் தோற்றப் பொலிவை குலைக்கின்றவர், இதனை ஆபத்துக்கு உட்படுத்துகின்றவர் அல்லது தவறாக பயன்படுத்துகின்றவர் யாராக இருந்தாலும், அவருக்கு 2010-ம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள் தொல்பொருள் ஆய்வு இடங்கள் மற்றும் எஞ்சிய பகுதிகள் சட்டத்தின் படி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்' எனக் கூறப்பட்டுள்ளது.