தமிழகம்

தென் தமிழகத்தில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

தென் தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்கள், வட தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரியில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (பிப். 1) தென் தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், பிப். 2-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப். 3, 4, 5-ம் தேதிகளில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT