திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் காந்திஜி தொடர்ந்து கடுமையாக கேலி செய்யப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்துள்ளார். காந்தியை நினைவுகூரும் நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் நடத்த வேண்டும் என்று முதல்வரிடம் தான் பலமுறை விடுத்த கோரிக்கை பிடிவாதமாக மறுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.
மகாத்மா காந்தி 78-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழியை ஆளுநர் வாசிக்க, பள்ளி மாணவர்கள், அலுவலர்கள் உறுதி ஏற்றுக் கொண்டனர்.
காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் ஆளுநரும், முதல்வரும் இணைந்தே பங்கேற்பது வழக்கம். தற்போது இருவர் இடையே மோதல் முற்றிவரும் நிலையில், நேற்று ஆளுநர் காந்தி மண்டபத்திலும், முதல்வர் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்திலும் மரியாதை செலுத்தினர்.
இந்த சூழலில், நேற்று மரியாதை செலுத்திய பிறகு, ஆளுநர் ரவி தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளதாவது: சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள பரந்த நிலத்தில், காமராஜரால் கடந்த 1956-ம் ஆண்டு கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவு சின்னம் காந்தி மண்டபம். அப்படி இருக்க, அவரை நினைவுகூரும் காந்தி ஜெயந்தி மற்றும் அவரது உயிர்த் தியாக தினத்தை நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா.
தேசத் தந்தைக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதல்வரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமாக மறுக்கப்பட்டன. காந்திஜி தனது வாழ்நாளில், திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால், இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? இவ்வாறு ஆளுநர் தெரிவித்துள்ளார்.