ஜல்லிக்கட்டைத் திரும்பக் கொண்டுவந்ததும் பிரதமர் மோடிதான். மோடி எப்போதும் தமிழகம் பக்கம் இருப்பார் என்பதை மறுபடியும் உணர்த்தியுள்ளார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய உதவிய மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு மேலூர் அ.வள்ளாலப்பட்டியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்துக்கு எதிரான எந்த திட்டத்தையும் பிரதமர் மோடி கொண்டுவர மாட்டார். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு முந்தைய மத்திய அரசு கையெழுத்திட்டது. அவை பாஜக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டன.
டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மேலூர் மக்கள் போராட்டம் நடத்தினர். பொதுவாக மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை ரத்து செய்வது சுலபமல்ல. ஆனால், இந்த மண் மக்களை விட்டுப் போகக்கூடாது என்பதற்காக மத்திய அரசு ரத்து செய்தது. ஜல்லிக்கட்டைத் திரும்பக் கொண்டுவந்ததும் பிரதமர் மோடிதான். மோடி எப்போதும் தமிழகம் பக்கம் இருப்பார் என்பதை மறுபடியும் உணர்த்தியுள்ளார்.
டங்ஸ்டன் திட்டம் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதால் ரத்தாகவில்லை. மக்களின் உணர்வுப்பூர்வமான கோரிக்கையை ஏற்றே திட்டத்தை ரத்து செய்துள்ளோம். இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
மக்கள் கோரிக்கையை ஏற்று... மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழ் கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பாதுகாத்து வருகிறது. குஜராத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம், காசி தமிழ் சங்கமம் நடத்தி தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொன்னார். திருக்குறள் உள்ளிட்டவற்றை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து, உலகம் முழுவதும் தமிழின் சிறப்பை தெரியவைத்துள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது, பிரதமர் மோடி ராஜதந்திர நடவடிக்கை மூலம் அவர்களை மீட்டு வருகிறார். இவற்றை அரசியலுக்காக இல்லாமல், தமிழ் மக்கள் மீது வைத்துள்ள அன்பு காரணமாக செய்து வருகிறார் பிரதமர் மோடி. தமிழக மக்கள் மத்தியில் தேசியம் என்ற கொள்கை வளர்ச்சி பெற்று வருகிறது. அந்த வகையில் தமிழக மக்கள் பிரதமரை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் என்னை சந்தித்து வலியுறுத்தினர். மக்களின் கோரிக்கையால் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உங்கள் அழைப்புக்கும், அன்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மத்திய அமைச்சர் பேசினார்.
ஞானசேகரன் பேசிய விவரம்... நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறும்போது, "அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞனசேகரனின் செல்போன் விவரம் என்னிடம் உள்ளது. அதை விரைவில் வெளியிடுவோம். இந்த வழக்கு விசாரணை திசைமாறிச் செல்கிறது. ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களுக்கு ஏற்பட்ட நிகழ்வு குறித்து முதல்வர் பேச வேண்டும்" என்றார்.