வேங்கைவயலில் உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரிக்கச் செல்ல வெளியூர் நபர்களுக்கு போலீஸார் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, சுதர்ஷன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்ததாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே, வெளியூர் நபர்கள் வேங்கைவயலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்காக ஊரை சுற்றிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர் முரளிராஜாவின் பாட்டி கருப்பாயி (85) வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதனால், வெளியூர்களில் உள்ள முரளி ராஜாவின் உறவினர்கள், நண்பர்கள் துக்கம் விசாரிப்பதற்காக நேற்று வேங்கைவயலுக்கு வந்தனர். ஆனால், அவர்களை அனுமதிக்க போலீஸார் மறுப்பு தெரிவித்தனர். இதனால், போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, துக்கம் விசாரிக்க வரும் அனைவரையும் ஊருக்குள் வர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, கருப்பாயின் உடலை ஊருக்குள் செல்லும் சாலையில் வைத்து அப்பகுதி மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அதன் பிறகு, வெளியூர்களில் இருந்து துக்கம் விசாரிக்க வந்தவர்களின் விவரங்களை சேகரித்து, பதிவு செய்துகொண்டு போலீஸார் அனுப்பிவைத்தனர்.