தமிழகம்

ஆவடி ஓசிஎஃப் தொழிற்சாலையில் இருந்து தென் அமெரிக்க நாட்டுக்கு ராணுவ உடைகள் ஏற்றுமதி

செய்திப்பிரிவு

சென்னை: தென் அமெரிக்காவில் உள்ள 'சுரினாம்' நாட்டின் ராணுவத்துக்கு ஆவடியில் உள்ள படைத்துறை உடை தொழிற்சாலையில் (ஓசிஎஃப்) இருந்து ஆடைகள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள முப்படையினருக்கான சீருடைகள் தயாரிக்கும் படைத்துறை உடை தொழிற்சாலை (ஓசிஎஃப்) இயங்கி வருகிறது. இந்தியாவில் முதல்முறையாக, இந்த தொழிற்சாலையில் இருந்து தென் அமெரிக்காவில் உள்ள சுரினாம் நாட்டின் ராணுவத்துக்கு சீருடை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி ஓசிஎஃப் வளாகத்தில் நடைபெற்றது.

ஓசிஎஃப் பொதுமேலாளர் பி.எஸ்.ரெட்டி, கூடுதல் பொது மேலாளர் குகன் உட்பட பலர் கொடியசைத்து ஏற்றுமதி வாகனத்தை தொடங்கி வைத்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பி.எஸ்.ரெட்டி கூறியதாவது:

படைத்துறை உடை தொழிற்சாலை 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இங்கு 1,500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு ஆரம்ப காலத்தில் ராணுவ உடைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. தற்போது முப்படைகளுக்குத் தேவையான அதிக சக்தி வாய்ந்த புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள், பாதுகாப்பு துறைக்கு தேவையான சீருடைகளை தயாரித்து வருகிறோம்.

இந்நிலையில், உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி மற்ற நாடுகளின் ராணுவத்துக்கான சீருடைகளை தயாரிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தென் அமெரிக்காவில் உள்ள சுரினாம் நாட்டுக்கு 4,500 ராணுவ உடைகள் தயாரித்து அனுப்பப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1.71 கோடி ஆகும்.

இந்த சீருடைகள் அடுத்த 2 மாதங்களுக்குள் அந்த நாட்டுக்கு சென்றடையும். இதனால், இருநாடுகளின் நட்புறவும் வளர்ச்சி அடையும். வரும் காலத்தில் பல நாடுகளுக்கு ராணுவ உடைகளை தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளோம்.

கடந்த ஆண்டு பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி மூலம் ரூ.20,083 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 31 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு துறைக்கான ஏற்றுமதி குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்துள்ளது. 2029-ம் ஆண்டுக்குள் ஏற்றுமதி மூலம் ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT