சென்னை: சென்னை மாநகரில் மாநகராட்சி சார்பில் 16 ஆயிரத்து 370 டன் கட்டிடக் கழிவு அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சிப் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாக பராமரிக்கும் வகையில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பை, கட்டிடக் கழிவு, சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, மாநகரப் பகுதியில் உள்ள 15 மண்டலங்களிலும் சாலைகள், தெருக்களில் உள்ள கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்ற தீவிர தூய்மைப் பணியை மேயர் ஆர்.பிரியா கடந்த ஜன.7-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் கடந்த ஜன.28-ம் தேதி வரையிலான 3 வாரங்களில் 16,370 டன் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும், கட்டிடக் கழிவுகளை அகற்றும் தீவிரத் தூய்மைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.