தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.327.69 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள 2,404 புதிய குடியிருப்புகள், ஜவுளித் துறை சார்பில் சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் ரூ.227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வளாகம் ஆகியவற்றுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இதுவரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 128 திட்டப் பகுதிகளில் ரூ.4,752.46 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 42,313 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைவருக்கும் வீடு திட்டத்தில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் கலைஞர் நகர் திட்டப்பகுதி, பெரியார் நகர் திட்டப்பகுதி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட ஆச்சார்யா வினோபாபாவே நகர், அண்ணா நகர் திட்டப்பகுதிகள், ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், ஆயக்காட்டூர் திட்டப்பகுதிகளில் மொத்தம் ரூ. 327.69 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள 2,404 குடியிருப்புகளுக்கு நேற்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுரஅடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளன. அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும்.
ஒருங்கிணைந்த வளாகம்: தமிழக அரசின் 2024-25 -ம் ஆண்டு பட்ஜெட்டில், “சென்னையில் 4 லட்சம் சதுரஅடி பரப்பளவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான அரங்குகளை உள்ளடக்கிய ஓர் ஒருங்கிணைந்த வளாகம் ரூ.227 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் 4.54 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் 8 தளங்களுடன் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் ரூ.227 கோடியில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வளாகத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். கட்டிடத்தின் அடித்தளம் 1 மற்றும் 2 -ல் 323 கார்கள் நிறுத்தும் வசதியும் கோ-ஆப்டெக்ஸ் காட்சியறையும், தரைதளம் முதல் இரண்டாம் தளம் வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 41 கடைகளும், மூன்றாம் தளம் முதல் ஐந்தாம் தளம் வரை 36 இதர மாநில கடைகளும் (One District One Product Shops), ஆறு மற்றும் ஏழாம் தளங்களில் புத்தாக்க மையம் மற்றும் வடிவமைப்பு அச்சுக்கூடமும், எட்டாம் தளத்தில் கோ-ஆப்டெக்ஸ் அலுவலகமும் அமைக்கப்படவுள்ளது.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், துறை செயலர்கள் மங்கத்ராம் சர்மா, காகர்லா உஷா , வே.அமுதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.