தமிழகம்

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்: வேங்கைவயல் வழக்கில் நீதிமன்றம் கூறுவது என்ன?

செய்திப்பிரிவு

வேங்கைவயல் சம்பவத்தில் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கண்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜரானார். அவர் வாதிடும்போது, "வேங்கைவயல் சம்பவத்துக்கு தனி நபர்கள் இருவரிடையே ஏற்பட்ட பிரச்சினைதான் காரணம். இந்த வழக்கில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, அறிவியல் பூர்வ ஆய்வுக்கு உட்படுத்தி, உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார். அப்போது மனுதாரர் தரப்பில், மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கை திரும்பப் பெறாமல் தொடர்ந்து நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, "இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்போது மாற்றி மாற்றி பேச என்ன காரணம்?" என்று கேள்வி எழுப்பினார்.

மனுதாரர் தரப்பில், "பாதிக்கப்பட்ட மக்களே குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. எனவே, உண்மையான குற்றவாளிகளை கண்டறியக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, "வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து விவரங்களையும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெளிவாக பதிவு செய்தார். நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற முயற்சிக்க வேண்டாம்.

குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லையெனில், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து வழக்கை எதிர் கொள்ளலாம்" என்று கூறி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

குற்றப்பத்திரிகை நகல்... வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வழக்கில், புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் கடந்த 20-ம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், வேங்கைவயலைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் குற்றச் செயலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையின் நகல் கோரி, குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, "குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த சம்பவம் வன்கொடுமை வழக்கில் வராது என்று முடிவு செய்திருப்பதை பாதிக்கப்பட்டோருக்கு சிபிசிஐடி போலீஸார் தகவல் தெரிவிக்காததால், குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

"பாதிக்கப்பட்டோரும், குற்றம் சாட்டப்பட்டோரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், இவ்வழக்கை வன்கொடுமை வழக்காக கருத முடியாது. எனவே, வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் இந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகல் கோருவது ஏற்புடையது அல்ல. ஆகையால், பாதிக்கப்பட்டோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை" என அரசு வழக்கறிஞர் குமார் வாதிட்டார். இதையடுத்து, அடுத்த விசாரணையை பிப். 1-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி வசந்தி உத்தரவிட்டார்.

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்துக்கு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை அமைக்கக் கோரி, ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கசி.விடுதலைக்குமரன் உள்ளிட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT