டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இன்று நன்றி தெரிவிக்கும் விழா நடத்தப்படுகிறது.
மதுரை மாவட்டம் மேலூரி்ல் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலூர் பகுதி விவசாய சங்கப் பிரதிநிதிகள் அண்ணாமலை தலைமையில் டெல்லி சென்று, மத்திய கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து, டங்ஸ்டன் திட்டத்தைக் கைவிடக்கோரி வலியுறுத்தினர். இதற்கிடையில், டங்ஸ்டன் சுரங்கத் திட்ட ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கு உறுதுணையாக இருந்த அரசியல் கட்சித் தலைவர்களை ஊருக்கே அழைத்து வந்து நன்றி தெரிவிக்கும் விழா நடத்தப்படுகிறது. அண்மையில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரிட்டாபட்டி, அ.வள்ளாலபட்டியில் நன்றி தெரிவிக்கும் விழா நடத்தப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியைும், நன்றி தெரிவிக்கும் விழாவுக்கு வருமாறு டங்ஸ்டன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு அ.வள்ளாலபட்டியில் இன்று நன்றி தெரிவிக்கும் விழா நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக வரும் மத்திய அமைச்சருக்கு இன்று மதியம் 2.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, பெருங்குடி, கடச்சனேந்தல், அழகர்கோயில் கோட்டைவாசலில் பாஜகவினர் அவரை வரவேற்கின்றனர். அ.வள்ளாலபட்டி விழாவில் பங்கேற்ற பின்னர் மத்திய அமைச்சர் அரிட்டாபட்டி வழியாக மதுரை விமான நிலையம் செல்கிறார்.