ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு, திமுகவினர் இந்தி மொழியில் துண்டறிக்கை விநியோகம் செய்துள்ளனர்.
இத்தொகுதியில் பிப். 5-ம் தேதிவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக–நாம் தமிழர் கட்சிக்கிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஈரோடு கோட்டை பகுதியில் வடமாநிலங்களைச் சேர்ந்தோர் அதிகம் வசித்து வருகின்றனர்.அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ள திமுகவினர், இந்தியில் அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கைகளை விநியோகம் செய்து, வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த நோட்டீஸில், திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர் படங்களுடன், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று இந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவின் இந்தி துண்டறிக்கையை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர், 'திமுகவின் மொழிப்பற்று இதுதானா?' என விமர்சனம் செய்துள்ளனர்.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறும்போது, ‘வட மாநில மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்குப் புரிவதற்காக இந்தியில் வாக்கு கேட்பதும், துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்வதும் வழக்கமான ஒன்றுதான். அனைத்துக் கட்சியினருமே இந்த முறையைப் பின்பற்றுவர்" என்றனர்.