தமிழகம்

ஈமு கோழி மோசடி வழக்கு: நிர்வாக இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.19 கோடி அபராதம் விதிப்பு

செய்திப்பிரிவு

ஈரோடு ஈமு கோழி மோசடி வழக்கில், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.19 கோடி அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த குருசாமி, பெருந்துறையில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். இதன் கிளை அலுவலகம் பொள்ளாச்சியிலும் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிக் குஞ்சுகள் அளித்து, பராமரிப்புத் தொகையாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மாதம் தலா ரூ.6 ஆயிரம், ஆண்டு போனஸாக ரூ.20 ஆயிரம் தரப்படும் என்றும், ஒன்றரை ஆண்டுகள் கழித்து முழு பணமும் திருப்பித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை நம்பி நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்நிறுவனம் 1,087 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.19 கோடி மோசடி செய்ததாக பொள்ளாச்சி தேவனம்பாளையத்தைச் சேர்ந்த கண்டியப்பன் என்பவர் 2012 ஆகஸ்ட் 10-ம் தேதி புகார் அளித்தார்.

இது தொடர்பாக கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, குருசாமியைக் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட சுசி ஈமு ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.19 கோடி அபராதம் விதித்து நீதிபதி எம்.என்.செந்தில்குமார் நேற்று தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT