சென்னையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. 
தமிழகம்

ஆளுநருக்கு நடத்தை விதிகள் உருவாக்க வேண்டும்: திமுகவின் 6 தீர்மானங்கள் என்னென்ன?

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில், ஆளுநருக்கு நடத்தை விதிகள் உருவாக்க வேண்டும். மாநில அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயத்தை உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (ஜன.29) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: > ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட, ஆளுநர்களுக்கு “நடத்தை விதிகள்” (Code of Conduct) உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் (Time Frame) செய்திடவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக வலியுறுத்தும்.

> மக்களின் துணையுடன் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மத்திய பாஜக அரசை பணிய வைத்து, டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த தமிழக முதல்வருக்கும், துணை நின்ற மக்களுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது .

> உருக்கு இரும்பு 5370 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளது என உலகுக்கு அறிவித்த திராவிட மாடல் அரசின் சாதனையை மத்திய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும்.

> கூட்டாட்சி தத்துவம், மாநில கல்வி உரிமை, உயர் கல்வி அனைத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக் கோரி திமுக மாணவரணி சார்பில் பிப்.6ம் தேதியன்று போராட்டம் நடத்தப்படும். திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவார்கள்.

> சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

> தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய பாஜக அரசு, இந்த முறை தமிழகத்தின் திட்டங்கள், பேரிடருக்கு நிதி ஒதுக்கீடும், மாநிலத்துக்கு முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவித்திட வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT