தமிழகம் முழுவதும் உள்ள 179 நீதிமன்ற வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.20 கோடி நிதி கோரி அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதிமன்ற பதிவாளர் (நிர்வாகம்) ஹரி தாக்கல் செய்திருந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் உள்ள 179 நீதிமன்றங்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 7 ஆயிரத்து 800 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மானிட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக தமிழக அரசிடம் ரூ. 20.04 கோடி நிதி ஒதுக்கக் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிதி கிடைக்கப்பெற்றதும் அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதிகள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணையை வரும் பிப்.27-க்கு தள்ளி வைத்துள்ளனர்.