தமிழகம்

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வது ஏன்? - அண்ணாமலை காட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: “அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரை வார்க்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்?” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள சுமார் 350-க்கும் அதிகமான பள்ளிகளில், 65,000-க்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்துக்குகு, அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம், அம்மா உணவகங்களில் பணிபுரிவோருக்கு, நிலையான வருமானம் கிடைக்கப்பெற்று வந்தது.

கடந்த 2023-ம் ஆண்டு, காலை உணவுத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயன்றபோது, மாமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், அந்த முடிவைக் கைவிட்டனர். தற்போது, மீண்டும் தனியாருக்குத் தாரைவார்க்க, ஒப்பந்தம் கோரி இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்தது திமுக அரசு. அப்படி மேம்படுத்தப்பட்ட அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரைவார்க்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்?

கண்துடைப்புக்காகத் திட்டங்கள் அறிவிப்பது அல்லது தங்கள் லாப நோக்கங்களுக்காகத் திட்டங்களை மடைமாற்றுவது என, நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தொடர்ந்து அம்மா உணவகங்களிலேயே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை கைவிட வேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT