கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வாகன நிறுத்துமிட பகுதி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறையும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தின் வாகன நிறுத்துமிட பகுதியில் 2,769 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 324 இலகுரக வாகனங்களை நிறுத்த முடியும். இந்நிலையில் இந்த வாகன நிறுத்தும் இடத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினருக்கும், போக்குவரத்துதுறை அதிகாரிகளுக்கும் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடத்தில் மது பிரியர்கள் காரில் அமர்ந்து மது அருந்துவது பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்துகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் பாண்டியன் கூறியது: மிக சிறப்பாக பேருந்து நிலையம் இருந்தாலும் பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் சில சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக சீட்டு விளையாடுவது, குடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கிறது.
சில சமயங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளை ஏமாற்றி பணம் பறிப்பது போன்ற குற்றச் செயல்களும் நடக்கின்றன. மது போதையில் பெண்களை சிலர் கிண்டல் செய்வது நடக்கிறது. மது அருந்துதல், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெறுகிறது. இரவு நேரத்தில் பாலியல் தொழிலும் நடை
பெறுவதாக கூறப்படுகிறது. பயணிகள் முகம் சுளிக்கும் வகையிலான செயல்கள் நடைபெறுகின்றன. ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாக காவல் துறையும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் மற்றும் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் நிறுவனம் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும். பயணிகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.