ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்த, மறைந்த திருமகன் ஈவெராவின் 10 கோரிக்கைகளில் ஒன்றை மட்டும் நிறைவேறியுள்ள நிலையில், மீதமுள்ள 9 கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில், காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின், அவர் உடல்நலக்குறைவால், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் காலமான நிலையில், அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
குறுகிய காலமே ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ பதவியை வகித்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், இத்தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா முதல்வர் ஸ்டாலினுக்கு வைத்த 10 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் வேண்டுகோள்: தமிழகத்தின் அனைத்து தொகுதி எம்எல்ஏக்களும் தங்கள் தொகுதியில் தீர்க்க வேண்டிய முக்கியமான 10 பிரச்சினைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் மூலமாக மனு அளிக்க வேண்டும் என திமுக ஆட்சி அமைந்த தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா, தொகுதியில் தீர்க்க வேண்டிய 10 பிரச்சினைகள் குறித்து ஆட்சியர் அலுவலகம் மூலமாக மனு அளித்தார்.
திருமகன் ஈவெரா முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கைகளில், 9 கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள்.
திருமகன் ஈவெரா தமிழக முதல்வரிடம் முன் வைத்த பத்து கோரிக்கைகளும் அவற்றின் நிலையும்...
> ஈரோட்டில் பாதாள சாக்கடைத் திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப் பணிகளால் சேதமான சாலைகள், சிமெண்ட் தளங்களைப் புதுப்பிக்க வேண்டும். (கடந்த டிசம்பர் மாதம் ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், மொடக்குறிச்சி, கோபி சாலைகள் ரூ. 100 கோடியில் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை மட்டும் வெளியிட்டுள்ளார்)
> சாயப்பட்டறை தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரித்து, கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். (இந்த திட்டம் குறித்த அரசின் நிலைப்பாடு இதுவரை தெளிவாக்கப்படவில்லை)
> ஈரோடு மாநகரில் மழை வெள்ள நீர் தேங்கி, கடைகள், பள்ளிகள், வீடுகளில் புகுவதைத் தடுக்க, நவீன சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். (இதுபோன்ற புதிய திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை)
> போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க, ஈரோடு தாலுகா அலுவலகம் அருகே, அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் நவீன வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும். (இது போன்ற திட்டம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை)
> வ.உ.சி.பூங்கா மைதானத்தை புனரமைத்து, விளையாட்டு மைதானம், நவீன உடற்பயிற்சிக்கூடம் அமைக்க வேண்டும். (ஈரோடு வ.உ.சி.பூங்கா ரூ. 15 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், இதுவரை அதற்கான எவ்வித பணியும் மேற்கொள்ளப்படவில்லை)
> மாநகராட்சி முதலாவது மண்டலம் அக்ராஹாரம் பகுதியில், துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். (இதுவரை இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை)
> மாநகரில் புதிதாக பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும். (இதுவரை இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை)
> ஈரோடு - மேட்டூர் சாலை முதல் பேருந்து நிலையம் வரை மேம்பாலம் அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். (இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை)
> திடக்கழிவு மேலாண்மை பணியை மேம்படுத்த, முதலாவது மண்டலத்தில் அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம், இரண்டாவது மண்டலத்தில் குமலன் குட்டை, கோட்டை, மூன்றாவது மண்டலத்தில் பெரியார் நகர், நான்காம் மண்டலத்தில் கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து எடுத்துச் செல்ல இடம் தேர்வு செய்ய வேண்டும். (இந்த கோரிக்கை தொடர்பாகவும், மாநகராட்சி தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை)
திருமகன் ஈவெரா எழுப்பிய 10 கோரிக்கைளில், ஈரோடு மாநகராட்சி எல்லையில், 3000 குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அரசு ஆவணங்கள் இருந்தும், பட்டா இல்லாமல் உள்ளது. அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில், 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 5122 குடும்பங்களுக்கு பட்டா வழங்க மட்டும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி, பெரியார் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வசித்த வீடு உள்ளிட்ட பல குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ‘நான் வசிக்கும் வீட்டுக்கு பட்டா வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி’ என சட்டப்பேரவையில் ஈவிகேஎஸ் தெரிவித்த நிகழ்வும் நடந்தது. இந்த அரசாணையின்படி, பட்டா வழங்கும் பணி நடைபெற்று வந்தாலும், அனைத்து குடும்பங்களுக்கும், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்பதே தற்போதைய நிலையாக உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி மூன்றாவது முறையாக தேர்தலை சந்திக்கும் நிலையில், தற்போது இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வேட்புமனு தாக்கலுக்குப்பின் பேசும்போது, ‘இடைத்தேர்தலுக்காக புதிய வாக்குறுதிகள் எதுவும் இல்லை’ என்று தெரிவித்தார்.
இந்த தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்து மறைந்த திருமகன் ஈவெரா முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கைகள் நிறைவேற இந்த ஓராண்டுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடமும், காங்கிரஸ் நிர்வாகிகளிடமும் எழுந்துள்ளது.