சென்னை: மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம் என்பன உள்ளிட்ட திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியூ) அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மின்வாரியத்தில் ஆரம்ப நிலை காலிப் பணியிடங்கள் 44 ஆயிரமும், ஒட்டுமொத்த காலிப் பணியிடங்கள் 62 ஆயிரமுமாக உள்ளது. களப்பிரிவில் மட்டும் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பாததால் பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 24-ம் தேதி மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்கும் வாய்ப்பு இல்லை என்று மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பொதுத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்வோம் என்று சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதை புறந்தள்ளும் வகையில் அமைச்சரின் அறிவிப்பு அமைந்துள்ளது.
முதல்வரின் அனுமதி பெற்று ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்குவோம் என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். எனவே, அமைச்சரின் அறிவிப்பை திரும்பப் பெற்று ஒப்பந்த ஊழியர்களுக்கு மின்வாரிய நிர்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும்.
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தனியாருக்கு வழங்காமல் கேரளாவைப் போல தமிழக மின்சார வாரியமே பொருத்திட வேண்டும். விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் 5 ஆயிரம் பேரை விரைவில் நியமிப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தஞ்சாவூரில் பிப்.7, 8 தேதிகளில் நடைபெறவுள்ள மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்து, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.