தமிழகம்

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பதக்கம், விருது வழங்கினார் முதல்வர்

செய்திப்பிரிவு

சென்னை: நாட்டின் 76-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட் டது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே நடந்த விழாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்து, முப்படைகள் மற்றும் பல்வேறு காவல் படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, பதக்கங்கள், விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சென்னையைச் சேர்ந்த முன்னணி தீயணைப்பு வீரர் க.வெற்றிவேலுக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அமீர் அம்சாவுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் ரா.முருகவேலுக்கு வேளாண்மை துறையின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது, 5 போலீஸாருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மதுரை மாநகரம், திருப்பூர் மாநகரம், திருவள்ளூர் ஆகிய 3 காவல் நிலையங்களுக்கு சிறந்த காவல் நிலையத்துக்கான விருதுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர், விருது பெற்ற அனைவரும் முதல்வர் ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உடன் இருந்தார்.

SCROLL FOR NEXT