தமிழகம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் போலீஸ் காவல் இன்று நிறைவு

செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் 7 நாள் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பி போராட்டங்களை முன்னெடுத்ததால் அவரது பின்னணியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் சோதனை நடத்தி வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். சம்பவம் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்தையும் ஆய்வு செய்தனர்.

மேலும் ஞானசேகரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதன்பேரில் அவரிடம் 7 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்துவதற்கு கடந்த 19-ம் தேதி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 21-ம் தேதி அன்று அவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒரு நாள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நிலை தேறினார்.

அதன்பின்னர் அவரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, அவரது தொடர்பில் போலீஸார், அரசியல் பிரமுகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இருப்பது தெரியவந்தது. மேலும், மாணவியிடம் நடைபெற்ற அத்துமீறல் தொடர்பாக மேலும் பல பரபரப்பு தகவல்களை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஞானசேகரன் கூறியதாக கூறப்படுகிறது.

அவர் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் ‘வீடியோ’ பதிவு செய்யப்பட்டது. அனைத்து விசாரணை விபரங்களும் பின்னர் நீதிமன்றத்தில் அளிக்கப்படும். இந்நிலையில் ஞானசேகரனுடைய 7 நாள் போலீஸ் காவல் இன்றுடன் (27-ம் தேதி) முடிகிறது. அவர் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

SCROLL FOR NEXT