தமிழகம்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மேடவாக்கத்தில் டிராக்டர் பேரணி

பெ.ஜேம்ஸ் குமார்

மேடவாக்கம்: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, சென்னை மேடவாக்கத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.,) உறுதிப்படுத்தப்பட வேண்டும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது உற்பத்தி செலவில் 50 சதவீதம் உயர்த்தி குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி அருகே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜக்ஜித்சிங் டல்லே வால் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கத்தில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலாளர் வி.கே.வி. துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி, மேடவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடங்கி, மேடவாக்கம் - பொன்மார் சாலை வழியாக சித்தாலப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் வரை சென்றது.

போக்குவரத்து நெரிசல்: இந்த பேரணியில் 20க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பங்கேற்றன. மொத்தமாக டிராக்டர்களை அனுப்பாமல் இடைவெளி விட்டு போலீஸார் அனுமதித்ததால் மேடவாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே, மெட்ரோ ரயில் பணி காரணமாக மேடவாக்கத்தில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரில் கடுமையாக காணப்படும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சற்று குறைந்து இருந்தாலும் டிராக்டர் பேரணியை முறையாக ஒழுங்குபடுத்தாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்தனர்.

SCROLL FOR NEXT