தமிழகம்

திருப்பரங்குன்றம்: மதுரை வழக்கறிஞர் மீது போலீஸார் வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பன்றிக் குட்டிகளுக்கு பாலூட்டிய லீலையை நடத்த அனுமதி கோரிய மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் மீது கோயில் கண்காணி்ப்பாளர் அளித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்துறை கண்காணிப்பாளர் சத்தியசீலன், போலீஸில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், திருப்பரங்குன்றம் கோயில் அலுவலகத்துக்கு பதிவு தபாலில் மனு அனுப்பியுள்ளார். தை அமாவாசை திதி நாளான ஜன.29ம் தேதி சிவபெருமான் பன்றிக் குட்டிகளுக்கு பால் ஊட்டிய லீலையை நடத்த திருப்பரங்குன்றம் மலைமீது அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் பொது அமைதி, மத நல்லிணக்கம், சட்டம், ஒழுங்குக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகிறார். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் போலீஸார், வழக்கறிஞர் முத்துக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT