சென்னை: தொழிலில் பல சிரமங்களை எதிர்கொண்டாலும் வழக்கறிஞர்கள் அறத்துடன் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.மயில்சாமியின் 60 ஆண்டுகால பணி பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில், மயில்சாமி வாழ்க்கை குறித்த புத்தகத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: வழக்கறிஞர் தொழிலில் சில புல்லுருவிகள் உள்ளதால் இந்த தொழில் கெட்டுவிடாது. பல சிரமங்கள் வந்தாலும் விரக்தி இருந்தாலும் வழக்கறிஞர்கள் அறத்துடன் இருக்க வேண்டும். எல்லாம் தனக்கே என்று மனிதன் நினைக்கும்போது தான் தவறு ஏற்படுகிறது. கல்லூரிகளில் படித்துவிட்டு, வழக்கறிஞராக வருவோரில் 10-ல் 7 பேர் அதற்கான தகுதி இல்லாமல் இருக்கிறார்கள்.
வழக்குகள் தேக்கம்: நாட்டில் 5 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. இதற்கு, வழக்கறிஞர்கள், அரசு, நீதிமன்றம் என பல காரணங்கள் உள்ளன. இதனை ஒரு வழக்கறிஞராலோ அல்லது ஒரு நீதிபதியாலோ மாற்ற முடியாது. சமுதாய மாற்றம் தேவை. நாட்டில் தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பது குறித்து தலைமை நீதிபதியிடம் பேசி வருகிறோம். இவ்வாறு பேசினார்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்: கடந்த காலங்களை போல் இல்லாமல் ஏராளமான முதல் தலைமுறையாளர்களுடன் வழக்கறிஞர் தொழில் போட்டி மிக்கதாக மாறி உள்ளது. அதேநேரம், போலியான வழக்கறிஞர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்தியாவில் வருமான வரித்துறை சட்டங்கள் சிக்கலாக உள்ளன. அதனை பட்ஜெட் வாயிலாக நிதியமைச்சர் மேலும் சிக்கலாக்குகிறார்.
அண்மையில் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய சட்டத்திருத்தம், ஏற்கெனவே இருந்த சட்டத்தின் 95 சதவீத சரத்துகளை கொண்டுள்ளது. புதிய நேரடி வரி விதிப்பு சட்டமும், பழைய சட்டம் போலவே இருந்தால் எந்த பலனும் அளிக்காது. வழக்கை காட்டி வரி செலுத்துவோரை மிரட்டி கூடுதலாக வரி செலுத்த வைக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் இருப்பதாக பாதிக்கப்படுபவர்கள் கூறுகின்றனர்.
விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன்: நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 2 லட்சம் வழக்குகள் 30 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றன. தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்: 60 ஆண்டு காலம் வழக்கறிஞர் பணி என்பது மிகப்பெரிய விஷயம். இவ்விழா பல ஆண்டுகள் பணி செய்ய எனக்கு உத்வேகம் அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
நிறைவில் அனைவருக்கும் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.மயில்சாமி நன்றி தெரிவித்தார். விழாவில், அவரது குடும்பத்தினர், மூத்த வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.