தமிழகம்

ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கிய விவகாரத்தில் நீதிமன்றம் புதிய உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ஐபிஎஸ் முன்னாள் அதிகாரி திலகவதிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு யாருக்கும் ஒதுக்க கூடாது என வீட்டு வசதி வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 'கல்மரம்' என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் 1,409 சதுர அடி வீடு கடந்த 2022-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் ஏற்கெனவே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாகக் கூறி, கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீட்டை தமிழக அரசு 2024-ம் ஆண்டு ரத்து செய்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி திலகவதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "ஏற்கெனவே வீடு சொந்தமாக வைத்திருக்கும் சுந்தரமூர்த்தி, எஸ்.ராமகிருஷ்ணன், மா.ராஜேந்திரன் ஆகியோருக்கு கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர், பிப்.11-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும் வீட்டு வசதி வாரியத்துக்கும் உத்தரவிட்டார். அதுவரை, ஏற்கெனவே திலகவதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT