சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.மோகனை நியமிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் சேலம் பார்த்திபன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக, பாதிக்கப்பட்ட எங்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.மோகனை நியமிக்க வேண்டும் என்று கடந்தாண்டு நவ.28-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. 3 மாதங்கள் ஆகும் நிலையில் கடந்த 22-ம் தேதி ஆர்.சீனிவாசன், பி.என்.பிள்ளை என்ற 2 அரசு வழக்கறிஞர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு தலைமை செயலரை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்து நாங்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்தபடி மூத்த வழக்கறிஞர் பி.மோகனை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். கோகுல்ராஜ் கொலை வழக்கு, மேலவளவு வழக்கு, கோவை ஆணவப் படுகொலை ஆகிய வழக்குகளில் மோகன் ஆஜராகி திறம்பட வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார்.
அதுபோல எங்கள் வழக்கிலும் அவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அந்த கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் 2 நாட்களில் உரிய பதில் அளிப்பதாகவும் தலைமை செயலர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உடனிருந்தார்.