சென்னை: வாழ்வில் சாதனையாளராக மாற நாம் தொடர்ந்து கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ‘நேச்சுரல்ஸ்’ நிறுவனர் சி.கே.குமரவேல் தெரிவித்தார். சென்னை ஃப்ரீலேன்ஸர்ஸ் கிளப் மற்றும் மேக்கர்ஸ் ட்ரைப் சார்பில் உலக தொழில் முனைவோர் விழா தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நேற்று நடைபெற்றது.
உலகளவில் தொழில் முனைவோர்கள், புத்தொழில் நிறுவனத்தினர், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரைக் கொண்டாடும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டது. இதில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள், புதுமையான கண்டுபிடிப்பாளர்கள், ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் ‘நேச்சுரல்ஸ்’ நிறுவனர் சி.கே.குமரவேல் பேசியதாவது: உலகில் செய்ய முடியாத ஒன்று என்று எதுவும் கிடையாது. விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நாம் எந்த காரியத்தையும் முடிக்கலாம். எந்தத் துறையாக இருந்தாலும், முதலில் உங்களின் லட்சியங்களைக் கண்டறிவது அவசியம்.
அதன்பின் அதற்கான இலக்குகளை தீர்மானித்து பயணப்பட வேண்டும். அப்போதுதான் நாம் அடைய நினைக்கும் வெற்றியை விரைவாக பெறமுடியும். தொழில் முனைவோராக விரும்புபவர்கள் நடைமுறையில் அதற்கான தேவையை அறிந்து கொள்ள வேண்டும்.
வாழ்வில் வெற்றிபெற விரும்பினால் எதற்கும் சாக்குப்போக்கு கூறாத மனிதராக வாழ கற்றுக் கொள்ளுங்கள். அவர்களால்தான் உலகத்தை தங்களுக்கானதாக மாற்ற முடியும். அதற்கு ஸ்டீவ் ஜாப்சை உதாரணமாகக் கூறலாம். அவர் ஒருபோதும் எதையும் முடியாது என்ற எண்ணத்தில் அணுகியதில்லை. செல்போன் தயாரிப்புக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பு இல்லை. ஆனால், அவர் தயாரித்த ஆப்பிள் போன்தான் உலகம் முழுவதும் முக்கிய பிராண்டாக உள்ளது.
உங்களுக்கான கனவுகளை சிறியதாக இல்லாமல் பெரியளவில் வைத்து கொள்ள வேண்டும். தொழிலில் வெற்றிபெற ஆங்கில மொழியும் தேவைப்படுகிறது. அதேநேரம் புத்தகங்களை விட ஆடியோ வழிக் கற்றலால் மொழிப் புலமையை எளிதில் பெறமுடியும். ‘இன்னோவேட்டிவ் சீக்ரட்ஸ் ஆஃப் சக்ஸஸ்’ என்ற புத்தகத்தை ஆடியோவாக கேட்டேன். இது என்னுடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த சமயத்தில் தொடங்கப்பட்டதுதான் ‘நேச்சுரல்ஸ்’ சலூன் தொழில்.
அதேபோல், வாழ்வில் சாதனையாளராக தொடர்ந்து கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். தற்போதைய காலத்துக்கேற்ப தொழில்நுட்பங்களுடன் நம்மை மேம்படுத்திக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டும். புதுமைகளை முயற்சி செய்ய தயங்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கலந்துரையாடல், கருத்தரங்கம், கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மாநாட்டில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்ரமணியம், இப்போ பே நிறுவனத்தின் தலைவர் கே.முருகன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
தொழில்முனைவில் சிறந்து விளங்குவோருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 25 விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.