தமிழகம்

சென்னை எழும்பூரில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசனுக்கு சிலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்​பூரில் உள்ள மொழிப்​போர் தியாகிகள் தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்​தில் அவர்​களது உருவச்​சிலை நிறு​வப்​படும் என்று முதல்வர் ஸ்டா​லின் அறிவித்​துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யுள்ள​தாவது:1938-ம் ஆண்டு மதராஸ் மாகாணத்​தின் அப்போதைய முதல்வர் ராஜாஜி, ‘தமிழக மாணவர்கள் இனி கட்டாயம் இந்தி கற்க வேண்​டும் என்று அறிவித்​தார். இதை எதிர்த்து பெரி​யார், மறைமலை அடிகள், திரு.​வி.க. நாவலர் சோமசுந்தர பாரதி, அண்ணா போன்ற தமிழ் அறிஞர்​கள், அரசியல் தலைவர்கள் தாய்​மொழி காக்க களம் கண்டனர்.

அப்போது, 14 வயதே ஆன பள்ளி மாணவர் கருணாநிதி, திரு​வாரூர் வீதி​யில் இந்தி திணிப்பை எதிர்க்க முன்​வந்​தார்.முதல்​கட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்​டத்​தில் கலந்​து​கொண்டு சிறை சென்ற நடராசன் 1939 ஜனவரி 15-ம் தேதி​யும், தாளமுத்து மார்ச் 11-ம் தேதி​யும் மறைந்​தனர்.

மக்களின் தொடர் போராட்​டத்​தால், அரசு 1940 பிப்​ரவரி 21-ம் தேதி கட்டாய இந்தி திணிப்பை கைவிடும் முடிவுக்கு வந்தது. கீழப்​பழு​வூர் சின்னச்​சாமி, விரு​கம்​பாக்கம் அரங்​கநாதன். கோடம்​பாக்கம் சிவலிங்​கம், மயிலாடு​துறை சாரங்​கபாணி. விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, பீளமேடு தண்டபாணி, சத்தி​யமங்​கலம் முத்து, அய்யம்​பாளையம் ஆசிரியர் வீரப்பன் ஆகியோர் தீக்​குளித்​தனர். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்​திரன் துப்​பாக்​கி​யால் சுட்டுக் கொல்​லப்​பட்​டார். இவர்கள் உள்ளிட்ட நூற்றுக்​கணக்​கானோரின் தீரம் ஆண்டு​தோறும் ஜனவரி 25-ம் தேதி நினை​வு​கூரப்​படு​கிறது.

தாளமுத்து - நடராசன் ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையில், சென்னை மூலக்​கொத்​தளத்​தில் பெரி​யார் திறந்து வைத்த நினை​விடம் தற்போது ரூ.34 லட்சத்​தில் புதுப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழ் மொழிப்​போர் தியாகிகள் நினைவு தினமான நேற்று இதை முதல்வர் ஸ்டா​லின் திறந்​து​ வைத்​தார். தாளமுத்து - நடராசன் மற்றும் மொழிப்​போர் தியாகி, சமூகப் போராளி டாக்டர் எஸ்.தர்​மாம்​பாள் அம்மை​யார் ஆகியோரது உருவப் படங்​களுக்குமலர் தூவி​யும், அவர்​களது நினை​விடத்​தில் மலர் வளையம் வைத்​தும் முதல்வர் மரியாதை செலுத்​தினார்.

சென்னை எழும்​பூரில் உள்ள தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்​தில் அவர்​களது உருவச் சிலை நிறு​வப்​படும் என்று முதல்​வர் ஸ்​டா​லின் அறி​வித்​தார். இந்த நிகழ்ச்​சி​யில், துணை ​முதல்​வர் உதயநிதி ஸ்​டா​லின், தமிழ் வளர்ச்சி, செய்தி துறை அமைச்​சர் ​மு.பெ.சாமிநாதன், எம்​.பி.க்​கள், எம்​எல்​ஏக்​கள் உள்​ளிட்​டோர்​ கலந்​துகொண்​டனர்​.

தலைவர்கள் அஞ்சலி: சென்னை கிண்டி, காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தாளமுத்து - நடராசன் உருவபடங்களுக்கு தமிழக அரசு சார்பில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

அதையடுத்து மூலக்கொத்தளம் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகதலைவர் விஜய், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் மொழிப்போர் தியாகிகளுக்கு புகழாரம் சூட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT