காரைக்குடி: காரைக்குடி அருகே அரசு பள்ளியில் மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மாணவரின் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பத்தரசர்கோட்டையைச் சேர்ந்த தம்பதி கைலாசம், வளர்மதி. இவர்களுக்கு சக்திசோமையா (14) என்ற மகன் மற்றும் 3 மகள்களும் உள்ளனர். கைலாசம் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், வளர்மதி கூலி வேலை பார்த்து தனது குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். மேலும் அவர்கள் 4 பேரையும் நன்கு படிக்க வைத்தார்.
சக்திசோமையா சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளியில் கணினியை இயக்குவதற்காக பிளக்கை மாட்டியபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து சாக்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். பிரேத பரிசோதனைக்காக மாணவரின் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி அறிவித்தார். ஆனால், நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டும். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தி மாணவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் தேவகோட்டை சார்-ஆட்சியர் ஆயுஷ் வெங்கட்வட்ஸ், டிஎஸ்பி பார்த்திபன், வட்டாட்சியர் ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை. அங்கு வந்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் ஆகியோர் மாணவரின் தாயாரிடம் ஆறுதல் கூறினர். அப்போது ஆஷா அஜித் கண்கலங்கியபடி பேசினார். அரசு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும் அமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி தனது தந்தை அறக்கட்டளை மூலம் ரூ.2 லட்சமும் தருவதாக கூறினர். இதையடுத்து உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர். பின்னர் முதல்வரின் இரங்கல் கடித்தத்தை அமைச்சர் வாசித்து, மொத்த ரூ.9 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார்.
பிரேத பரிசோதனை முடிந்ததும் மாணவரின் உடலுக்கு அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, எம்எல்ஏ செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் மாணவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர். இதனிடையே மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமைஆசிரியர் கணேசனை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாணவரின் உயிரிழப்பு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும். ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்யும், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மின் கசிவு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.விசாரணை அறிக்கை வந்தபின்னர் மேல்நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
தவமிருந்து பெற்ற மகனை இழந்ததாக கதறி அழுத தாய் : மாணவரின் தாயார் வளர்மதி, ‘ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், தவமிருந்து 4-வது குழந்தையாக சக்திசோமையாவைப் பெற்றேன். அவனுக்காக ஆண்டுதோறும் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறேன். தற்போது அந்த மகனையும் இழந்துவிட்டேன்’ என்று கூறி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.