புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருமயம் கடைவீதியில் தேமுதிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: ஜகபர் அலி கொலையைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகுதான் தமிழக அரசு, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்தது. ஆனால், கனிம வளத்தை பாதுகாக்க முயன்றதற்காக கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. நிதியும் கொடுக்கவில்லை. திருச்சியில் இருந்து திருமயம் வழியாகத்தான் அண்மையில் சிவகங்கைக்கு தமிழக முதல்வர் சென்றார். அப்போது கூட குடும்பத்தினரை நேரில் சந்தித்திருக்கலாம்.
ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் நாங்கள் தான் பாதுகாவலர் என்று கூறும் திமுகவினர், இந்த விவகாரத்தில் எங்கே சென்றார்கள்? ஜகபர் அலி குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். கொலை செய்தவர்கள், துணையாக இருந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேங்கைவயல் விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில் தவறு செய்தவர்களை அரசு தப்பிக்க வைத்துள்ளதாக தெரிகிறது. எனவே, இதுகுறித்து முறையாக விசாரிக்க வேண்டும். ஒருவேளை இவர்கள்தான் தவறு செய்தவர்கள் என்பது உண்மையானால் தண்டனை கொடுப்பதில் தவறில்லை. தற்போது வரை ஒரு கூட்டணியில் தேமுதிக இருக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.