தமிழகம்

டங்ஸ்டன் ஏலம் ரத்து: முதல்வர் ஸ்டாலினுக்கு அரிட்டாப்பட்டியில் பாராட்டு விழா நடத்த திட்டம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் உடனடியாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசு ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, தெற்கு தெரு, மீனாட்சிப் பகுதியை சேர்ந்த ஊரின் முக்கிய நபர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்கள் இன்று காலை வணிக வரித் துறை அமைச்சரும், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளருமான பி.மூர்த்தி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.

அப்போது மேலூர் பகுதி விவசாயிகள், நாளை நடக்கும் பாராட்டு விழாக்கு வருமாறு நேரில் அழைப்பு விடுத்தனர். அவர்கள் அழைப்பை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மதுரை வருகிறார். காலை சென்னையில் நடக்கும் குடியரசு தினவிழாவில் பங்கேற்றுவிட்டு தனி விமானம் மூலம், மதுரை வருகிறார். அவர் அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி மக்கள், விவசாயிகளை சந்திக்கிறார்.

இது குறித்து ‘டங்ஸ்டன்’ போராட்டக்குழுவினர் கூறுகையில், ‘‘டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சிகளுமே பொதுமக்களுடன் இணைந்து குரல் கொடுத்தனர். முதல்வர் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்ததோடு, இந்தத் திட்டம் வந்தால் பதவியை ராஜனமா செய்வேன் என்று தெரிவித்ததால் இந்தத் திட்டம் ரத்துக்கு அவரது இந்த நெருக்கடியும் முக்கிய காரணம். அதனால், அவருக்கு, போராட்டத்தில் பங்கேற்ற ஊர் பெரியவர்கள், உள்ளூர் திமுகவினர் வழிகாட்டுதலோடு பாராட்டு விழா நடத்துகிறார்கள்,’’ என்றார்.

மதுரை மாவட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பாராட்டு விழா அரிட்டாப்பட்டியிலா அல்லது வல்லாளப்பட்டியிலா என்பது தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை. அமைச்சர் பி.மூர்த்தி சொன்னபிறகுதான், அதற்கான ஏற்பாடுகள் எந்த இடத்தில் தொடங்குவது என்பது தெரிய வரும்’’ என்றார்.

பின்புலம் என்ன? - மதுரை அருகே தொல்லியல் பாரம்பரிய வரலாற்று சிறப்பு மிக்க கிராமமாக அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் திகழ்கின்றன. இந்த கிராமங்களில் 4,980 ஏக்கர் நிலங்களில் ‘டங்ஸ்டன்’ கனிமம் வெட்டி எடுப்பதற்காக தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த நவ.7-ம் தேதி ஏலம் மூலமாக அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு இப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்த தொடங்கினர்.

கடந்த ஜனவரி 7-ம் தேதி மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 15 கி.மீ நடைபயணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மதுரை வந்த போராட்டக் குழுவினர் தல்லாகுளம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெற்று தமிழகம் முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து, தமிழக பாஜக கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு ஆதரவாக மத்திய அரசு, ‘டங்கஸ்டன்’ சுரங்கம் ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர். தமிழக சட்டமன்றத்தில் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அரசு தனி தீர்மானம் நிறைவேற்றியது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் முதல்வர், நான் முதல்வராக இருக்கும் வரையில் இந்த திட்டம் வராது, அப்படி என்னை மீறி வந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன் என சவால் விடுத்திருந்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மேலூர் பகுதிக்கு நேரடியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து, மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யும், அதற்கு நான் பொறுப்பு, பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என்று வாக்குறுதி கொடுத்தார். அதற்கு, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன்ரெட்டி இத்திட்டத்தை ரத்து செய்து, அதற்கு அரசாணை வெளியிட்டால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிட்டப்படி, மேலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் 8 பேரை அழைத்து டெல்லி சென்று, மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்திக்க வைத்து பேச வைத்தார். பொதுமக்கள் போராட்டம், விவசாயிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக டங்ஸ்டன் சுரங்க ஏல அனுமதியை முழுவதுமாக ரத்து செய்துள்ளதாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை 3 மாதங்கள் நீடித்த தொடர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.இதனால், மேலூர் பகுதி கிராம மக்கள், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் நிம்மதி அடைந்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பை அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

SCROLL FOR NEXT