சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.6.60 கோடி செலவில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மணி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அரவிந்த், கதிரியக்கவியல் துறை பேராசிரியர் மருத்துவர் செழியன், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக பொதுமேலாளர் சொர்ணம் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.6.60 கோடி செலவில் 1.5 டெஸ்லா எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கருவியில் நோயாளிகளின் தலை முதல் கால் வரை இமேஜிங் செய்யலாம்.
நவீன மென்பொருட்கள் உள்ளதால் நரம்பியல், இதயம், புற்றுநோய், ரத்தநாள அறுவை சிகிச்சை நோயாளிகள், பச்சிளம் குழந்தைகள், இதர வயது குழந்தைகள் மற்றும் உலோக உள்வைப்புகளுடன் உள்ள நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம்.
செயற்கை நுண்ணறிவு மூலம் இக்கருவியைக் கொண்டு துரிதமாக ஸ்கேன் செய்வதால் குறைந்த நேரத்தில் அதிக நோயாளிகளை ஸ்கேன் செய்யலாம். டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் தினமும் 100 பேருக்கும், கேத்லேப் 12 பேருக்கும் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி முதல்வரால் ரூ.34.60 கோடியில் தொடங்கி வைக்கப்பட்ட அதிநவீன இயந்திர மனிதவியல் (ரோபோடிக்) அறுவை சிகிச்சை மையம் மூலம் இதுவரை 325 நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சம் வரை செலவாகும் ரோபோடிக் அறுவை சிகிச்சை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 34,000-க்கும் மேற்பட்ட அலுவலர்களும், பணியாளர்களும் பயன்பெற்றுள்ளனர். அதே நடைமுறை பல் மருத்துவர்களுக்கும் கடைபிடிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.