தமிழகம்

பேருந்து கட்டண உயர்வு குறித்து 4 மாதங்களில் முடிவு எடுக்க உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு 4 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த அரசுக்கு உத்தரவிடக்கோரியும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில், உயர்மட்டக் குழுவை நியமிக்கக் கோரியும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அதில் கடந்த 2018 -ம் ஆண்டு தமிழகத்தில் பேருந்துகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டபோது டீசல் லிட்டருக்கு ரூ.63-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது டீசல் லிட்டருக்கு ரூ. 92-க்கு விற்கப்படுகிறது. கேரளாவில் ஒரு கிமீ தூரத்துக்கு ஒரு ரூபாய் 10 காசுகளும், கர்நாடகாவில் ஒரு ரூபாயும், ஆந்திராவில் ஒரு ரூபாய் 8 காசுகளும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 காசுகள் மட்டும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த உத்தரவிட வேண்டும் எனக்கோரப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பேருந்து கட்டணம் நிர்ணயிக்க போக்குவரத்து துறைச் செயலாளர் தலைமையில், போக்குவரத்து துறை கூடுதல் செயலாளர்கள், நிதித்துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர் அடங்கிய உயர்மட்டக் குழு அமைத்து கடந்தாண்டு டிச.6 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த உயர்மட்டக்குழு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, ‘‘பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் கருத்துகளை கோருவதுடன், பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டு தமிழக அரசின் உயர் மட்டக்குழு 4 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT