மதுரை: அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் பிப்.12-ம் தேதி ஜல்லிக்கட்டு நடப்பதாக இருந்த நிலையில், மீண்டும் போட்டி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் ஆதரவு தராததால் நடப்பாண்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு முதல்வர் வரவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றவை. இந்தப் போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுக்காக கேலரிகள் அமைக்கப்படும். ஆனால், இந்த கேலரிகளை முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்களே ஆக்கிரமித்து கொள்வதால் வெளியூர்களில் இருந்து வரும் பார்வையாளர்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் கண்டுகளிக்க முடியவில்லை.
இதற்காக, கிரிக்கெட் மைதானம் போன்று நவீன காலத்துக்கு ஏற்றார்போல் ஜல்லிக்கட்டு போட்டிகளையும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் ரூ.62 கோடியே 77 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு தமிழக அரசு, கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டியது. கடந்த இந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவுபெற்றதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து, இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.
அதோடு அங்கு நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டியையும் தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு கார், இருசக்கர வாகனம், தங்க காசு போன்ற விலையுர்ந்த பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த அலங்காநல்லூர் சுற்றுவட்டார பாரம்பரிய ஜல்லிக்கட்டு கிராம மக்கள், இந்த மைதானத்துக்குள் நடந்த போட்டிகளை பார்க்க வரவில்லை. அழைத்துவரப்பட்ட பார்வையாளர்களும், முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே சென்றுவிட்டனர்.
அதன்பிறகு போட்டி மிக குறைவான பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனால், இந்த மைதானத்தில் கடந்தாண்டு அடுத்தடுத்து நடக்கவிருந்த போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் வரும் 12-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம், தமிழக அரசிடம் அரசாணை வெளியிட கோரியும், அனுமதி கேட்டும் கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால், தற்போது மீண்டும் போட்டி தள்ளிப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கிழக்கு சட்ட மன்ற தொகுதி சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி ஏற்பாட்டில் வரும் 8-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதாக இருந்தது. அதன்பிறகு 12-ம் தேதிக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்ட்டுள்ளது. தற்போது மீண்டும் இந்த போட்டியை 16-ம் தேதி நடத்தலாமா என ஆலோசனை செய்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டு மைதானம் சுற்றுலாத் துறை சார்பில் பராமரிக்கப்படுவதால், போட்டி நடத்துவதற்கு ஒரு நாள் வாடகையாக அமைச்சர் பி.மூர்த்தி தரப்பில் இருந்து ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்பிறகு மற்ற சட்டமன்ற தொகுதிகள் வாரியாகவும் தொடர்ந்து 8 ஜல்லிக்கட்டு போட்டிகளை அங்கு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத காளைகளுக்கும், வீரர்களுக்கும் முன்னுரிமை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் ஆதரவு இல்லாததால் இந்த மைதானத்தில் நடக்கும் போட்டிக்கு எதிர்பார்ப்பும், வரவேற்பும் இல்லாமல் உள்ளது,” என்றார்.