தமிழகம்

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி - பெ.சண்முகம் சொல்லும் காரணம்

செய்திப்பிரிவு

சென்னை: வேங்கைவயல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வழக்கை சிபிஐ-யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மனிதக்கழிவை கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை.

சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை தமிழக அரசு சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, வேங்கைவயல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20-ம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றுகூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆபரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளிராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT