சென்னை: 'இந்து பார்த்தசாரதி' மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 'இந்து பார்த்தசாரதி' என அரசியல் தலைவர்கள் முதல் சக பத்திரிக்கையாளர்கள் வரை அன்புடன் அழைக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளர் ஆர்.பார்த்தசாரதி மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
அவர் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் நீண்டகாலம் பணிபுரிந்தவர். ஆதாரபூர்வமான அரசியல் கட்டுரைகளை வாசகர்களுக்குத் தரும் ஆற்றல் படைத்தவர். அவர் திராவிட முன்னேற்றக் கழகம் குறித்த செய்திக்கட்டுரைகளை எழுதி வந்த மிகச் சிறந்த செய்தியாளர் ஆவார். அன்றாட அரசியல் நிகழ்வுகள் பற்றி முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியிடம் விவாதிக்கும் மிகச் சில பத்திரிகையாளர்களில் பார்த்தசாரதி முக்கியமானவர்.
கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்தவர். என்னுடனும் நட்பு பாராட்டியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், “தி இந்து குழுமத்தில்” அவருடன் பணியாற்றியவர்களுக்கும், பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.