சென்னை: குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பொன்னுக்கு வீங்கி அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கோடை காலம் வரவுள்ள நிலையில், சிக்கன் பாக்ஸ் எனப்படும் சின்னம்மை, மீசில்ஸ் என்ற தட்டம்மை, சின்னமுத்து, மணல்வாரி அம்மை, வேரிசெல்லா சோஸ்டர் என்ற அக்கி, மம்ப்ஸ் என்ற கூகைக்கட்டு அம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற அம்மை நோய் பரப்பும் வைரஸ்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இவற்றில், அதீத காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, உடல்வலி, வயிற்றுபோக்கு, பசியின்மை போன்ற அறிகுறிகளுடன் பொன்னுக்கு வீங்கி அம்மை நோய் குழந்தைகளிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நோயால், நாள்தோறும் 10-க்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அம்மை நோய் ஏற்பட்டால் அலட்சியம் காட்டாமல் சிகிச்சை பெறுவது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: பொன்னுக்கு வீங்கியின் முக்கிய அறிகுறியாக கன்னப்பகுதிக்கு கீழே கழுத்தின் ஒரு புறத்திலோ, இரு புறங்களிலுமோ வீக்கம் ஏற்படும். இத்தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையாக காய்ச்சலை குறைக்கும் பாராசிட்டமால் வழங்கலாம். வலி அதிகமாக இருக்கும் என்பதால் மருத்துவர் பரிந்துரையில் வலி நிவாரணிகள் வழங்க வேண்டும்.
வீக்கம் ஏற்பட்ட இடத்தில் குளிர் அல்லது சுடு ஒத்தடம் வழங்கலாம். கஞ்சி, மோர், பழச்சாறு, கூழ் போன்றவை சாப்பிடலாம். அதிகளவு நீரை பருக வேண்டும். இந்நோய் ஓரிரு வாரங்களில் தானாகவே குணமாகக் கூடியது. அதேநேரம், சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக கணையத்தை தாக்கி அதீத வயிற்று வலி ஏற்படுத்தும்.
பெண் குழந்தைகளுக்கு சினைப்பையை தாக்கி அழற்சியை ஏற்படுத்துவதுடன், அடிவயிற்று பகுதியில் தீவிர வலியை ஏற்படுத்தும். ஆண்களின் விந்தணு உற்பத்தியில் விதைகளில் அழற்சியை ஏற்படுத்தி வலியை உண்டாக்கும். தண்டுவட நரம்பில் வைரஸ் தொற்று ஏற்பட்டால், மூளை வரை தொற்று பரவி மூர்ச்சை நிலை, கழுத்து பகுதி இறுக்கம், பிதற்றல் நிலை, தீவிரமான தலைவலியை உண்டாக்கும்.
இருமல், தும்மல், சளி போன்றவற்றின் வாயிலாக மற்றவர்களுக்கு இந்நோய் பரவும் என்பதால், பொது இடங்கள், பள்ளிகள் போன்றவற்றில் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை குறைந்தது ஒரு வாரம் தனிமைப்படுத்துவது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.