ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு காட்டாமல் விதிமுறைகளை சமமாக அமல்படுத்த வேண்டும் என்று போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
‘அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த பாமக மகளிர் அணிக்கு அனுமதி மறுத்த போலீஸார், ஆளுநருக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்த, விதிகளை மீறி அனுமதி அளித்துள்ளனர்’ என்று கூறி பாமக கொள்கை பரப்பு செயலாளர் சேகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘ஆளுநருக்கு எதிராக திமுக நடத்திய போராட்டத்துக்கு போலீஸார் எந்த அனுமதியும் வழங்கவில்லை. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் திமுகவினருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
பாமக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, ‘‘அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை கைது செய்த போலீஸார், திமுகவினரை மட்டும் கைது செய்யாதது ஏன்? ஆளுநருக்கு எதிரான அந்த போராட்டத்தை தடுக்க முற்படாதது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு காவல் துறை தரப்பில், ‘‘அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி கூறியதாவது: ஆட்சிகள் மாறினாலும், அதிகாரிகள் பதவியில் நீடிப்பார்கள். எனவே, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு காட்டாமல் விதிமுறைகளை போலீஸார் சமமாக அமல்படுத்த வேண்டும். யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல என்பதால் காவல் துறையினர் பாரபட்சம் காட்ட கூடாது. எதிர்காலத்தில் போலீஸார் இதுபோல நடந்துகொள்ள கூடாது. போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் விதிமுறைகளை வகுக்க வேண்டும். இவ்வாறு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.