கோவையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

“நாங்கள் பெரியாரை அவமானப்படுத்தவில்லை” - அண்ணாமலை

செய்திப்பிரிவு

நாங்கள் பெரியார் கொள்கையை ஏற்கவில்லை என்றாலும், அவரை அவமானப்படுத்தவில்லை. பெரியாரை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மதுரை மேலூர் தொகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்துக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் இந்த அரசாணை கொண்டு வரப்பட்டுள்ளது. டங்ஸ்ட்ன் விவகாரத்தில் நாங்கள் திமுகவைப்போல அரசியல் செய்யாமல், ஆக்கப்பூர்வமான கட்சியாக செயல்பட்டுள்ளோம். டங்ஸ்டன் சுரங்க நடவடிக்கை ரத்து என்பது ஜனநாயகத்தின் வெற்றியாகும். பிரதமர் தமிழகத்தின் மீதுள்ள அன்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு புழக்கத்தில் இருந்துள்ளது என்பதற்கான வரலாற்றுச் சான்றை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதை வரவேற்கிறாம். தமிழனாக நாம் எல்லோரும் பெருமைப்பட்டுக் கொள்வோம்.

திருப்பரங்குன்றம் முருகனின் ஸ்தலமாகும். ஆனால் நவாஸ்கனி எம்.பி. அங்கு சென்று மதப் பிரச்சினையை உருவாக்குகிறார். மலையில் மாமிசம் சாப்பிடுகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். திமுகவின் தூண்டுதலி்ன் பேரில் இவ்வாறு செயல்படுகின்றனர். இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.

காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு கச்சத்தீவை தாரைவார்த்ததால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக திமுக, காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும். கச்சத்தீவு விவகாரத்தில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட பிரதமர் உறுதுணையாக இருப்பார்.

நாங்கள் பெரியார் கொள்கையை ஏற்கவில்லை என்றாலும், அவரை அவமானப்படுத்தவில்லை. பெரியாரை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. எங்கள் பாதை வளர்ச்சியை நோக்கி உள்ளது. தேர்தல் நெருங்குவதால், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் தவறான தகவலைத் தெரிவிக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது தொடர்பாக திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் மலரும். எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளதை. கருத்தை, கருத்தால் எதிர்த்தால் ஜனநாயகத்துக்கு நல்லது. சென்னை அருகில் விமானநிலையம் வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

SCROLL FOR NEXT