தமிழகம்

போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ஞானசேகரனுக்கு வலிப்பு நோய்: அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

செய்திப்பிரிவு

போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் ஞானசேகரனுக்கு நேற்று அதிகாலை திடீரென வலிப்பு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியான வழக்கு என இரண்டு பிரிவாக பிரித்து தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.

இதற்கு வசதியாக 7 நாள் போலீஸ் காவலில் ஞானசேகரனிடம் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஞானசேகரனின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற தினத்தில் என்ன நடந்தது என அடுக்கடுக்கான கேள்விகளை போலீஸார் கேட்டுள்ளனர். அப்போது, மாணவியை எவ்வாறெல்லாம் மிரட்டினார், அச்சுறுத்தி பணிய வைத்தார் என்பது குறித்து ஞானசேகரன் விரிவாக பதில் அளித்துள்ளார். அப்போது, பல தகவல்களை மறைத்துள்ளார்.

ஆனாலும், போலீஸார் குறுக்கு கேள்விகள் கேட்டு முழு பதிலையும் பெற்றுள்ளனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆபாச வீடியோக்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதில் 3 பெண்களை மிரட்டி அவர்களுடன் ஞானசேகரன் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்து செல்போனில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதை சுட்டிக் காட்டியும் போலீஸார் விசாரித்துள்ளனர். அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்த்தபோதும், விடாமல் பதிலை போலீஸார் பெற்றுள்ளனர். இவ்வாறாக ஞானசேகரனிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், அவருக்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறப்பு புலனாய்வு போலீஸார் அவருக்கு அங்கேயே முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கைதிகளுக்கான சிறப்பு வார்டில் ஞானசேகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுஒருபுறம் இருக்க, ஞானசேகரனுடன் நெருக்கம் காட்டியுள்ள சில போலீஸார் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. அவர்களுக்கு அவ்வபோது ஞானசேகரன் பண உதவி செய்தது, அதற்காக போலீஸார் செய்த உதவிகள், குறித்தும் விவரங்கள் கிடைக்கவே, அவற்றை வைத்தும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்ட போலீஸாரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இதுதவிர, அண்ணா பல்கலைக் கழக ஊழியர்கள், காவலாளிகள் உள்பட மேலும் சிலருடனும் ஞானசேகரன் தொடர்பில் இருந்தது தெரியவரவே, அவர்களின் பட்டியலையும், எவ்வாறெல்லாம் அவர்கள் ஞானசேகரனுக்கு உதவி புரிந்தனர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

முக்கியமாக ஞானசேகரன் வழக்கில் யார் அந்த சார்? என்ற கேள்வி வைரலானது. அப்படி யாரேனும் உள்ளனரா? அப்படி இருந்தால் அவர் யார்? அவரது பின்புலம் என்ன என்பது உட்பட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஞானசேகரன் உடல்நலம் தேறிய உடன் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில், மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT