தமிழகம்

‘தம்பி ஞானசேகரன்’ என கூறியது ஏன்? - அப்பாவு விளக்கம்

செய்திப்பிரிவு

‘தம்பி ஞானசேகரன்’ என்று ஒரு நிகழ்ச்சியில் சாதாரணமாகப் பேசியதை பெரிதுபடுத்தி வருகிறார்கள். என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.

மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான நீச்சல் போட்டிகளை பாளையங்கோட்டையில் நேற்று தொடங்கிவைத்த அப்பாவு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக ஆளுநர் 3 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் நடந்து கொண்டவிதம் தொடர்பாகவும், மாநிலங்களில் அவ்வாறு ஆளுநர்கள் செயல்படக் கூடாது எனவும் வலியுறுத்தி, பிஹாரில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் பேசினேன்.

தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டுவந்த தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுப்பது கிடையாது. தீர்மானங்களை திருப்பி அனுப்பிவிட்டு, மீண்டும் அந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றினாலும், ஒப்புதல் அளிக்காமல் இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் பேசினேன். தமிழக அரசு கொண்டுவரும் எந்த சட்டத்தையும் நிறைவேற்றாமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பதையும் எடுத்துரைத்தேன்.

ஆளுநர் குறித்து தவறாகவோ, உண்மைக்குப் புறம்பாகவோ எந்த கருத்தையும் கூறவில்லை. ஆனால், இதுகுறித்து தொடர்ந்து பேச அனுமதி மறுத்ததுடன், உங்களது பேச்சு பதிவாகாது என்று மாநிலங்களவை துணைத் தலைவர் தெரிவித்தார். இது ஏற்புடையதல்ல. எனவே, ஜனநாயக முறைப்படி எனது எதிர்ப்பைக் காட்டும் வகையில் வெளிநடப்பு செய்தேன்.

‘தம்பி ஞானசேகரன்’ என்று ஒரு நிகழ்ச்சியில் சாதாரணமாகப் பேசியதை பெரிதுபடுத்தி வருகிறார்கள். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஞானசேகரன் என்ற நபர் எனக்கு சால்வை அணிவித்தார். அவரது பெயரைக் கேட்டு நகைச்சுவையாக அவரை மையப்படுத்தி பேசியதை சர்ச்சையாக்கி விட்டனர். முழு காணொலியையும் பார்த்தால் உண்மை தெரியும்.

பரந்தூர் விமான நிலையம் அந்தப் பகுதியை விட்டு வேறு எங்கும் செல்லாது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். தவெக தலைவர் விஜய்-ஐ கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை. சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்குடன் சிலர் செயல்பட முற்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT