விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் நேற்று தொடங்கினர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தியதில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 69 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த சிபிஐ-க்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் சேஷசமுத்திரம் பகுதியில் நேற்று முதல்கட்ட விசாரணையைத் தொடங்கினர். இதற்காக 3 கார்களில் வந்த சிபிஐ அதிகாரிகள், அப்பகுதியில் நச்சு கலந்த கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்து, பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். கருணாபுரத்தில் தாமோதரன் என்பவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், சேஷசமுத்திரம் கிராமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலரிடமும் விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.