கோப்புப் படம் 
தமிழகம்

‘இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’ திட்டம் நாடு முழுவதும் அமலாகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை இந்தியா முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தேசிய தர உறுதிபெற்ற 403 அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தர உறுதி நிர்ணய திட்டம், மகப்பேறு அறை - கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்டம், குழந்தைகள் பராமரிப்பு பிரிவு மற்றும் குழந்தை சுகாதார சேவைகளின் தர உறுதி நிர்ணய திட்டங்களின் தேசிய தர உறுதி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் சான்றிதழ்களை வழங்கினார். சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழக சுகாதாரத் துறைக்கு 403 விருதுகள் கிடைத்துள்ளன. இந்த ஆட்சி காலத்தில் மருத்துவமனைகளை தரம் உயர்த்தும் பணிக்கு இந்த விருதுகளே பெரிய அளவிலான உதாரணம். இது தமிழக சுகாதாரத் துறைக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய அளவிலான அங்கீகாரம். தமிழகத்தின் சுகாதாரத் துறை இன்றைக்கு உலகம் முழுவதும் பேசும்பொருளாக மாறியிருக்கிறது.

அண்மையில் அயலக அணி சார்பில் மருத்துவ சுற்றுலா எனும் தரப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் இருந்து மருத்துவம் பார்ப்பதற்கு தமிழகத்துக்கு 15 லட்சம் பேர் வருகின்றனர். உலகம் முழுவதும் மருத்துவம் பார்ப்பதற்கு இந்தியாவுக்கு வருபவர்களில் 20 சதவீதம் பேர் தமிழகத்துக்கு வருகின்றனர்.

இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் மூலம் இதுவரை சாலை விபத்தில் சிக்கிய 3.23 லட்சம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் காப்புறுதி தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அரசு செலவு செய்துள்ள தொகை ரூ.282 கோடி ஆகும். இந்த திட்டத்தின் தரவுகளை மத்திய அரசு பெற்று, இத்திட்டத்தை இந்தியா முழுவதும் விரைவில் செயல்படுத்தவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT