மதுரை: ஜல்லிக்கட்டுக்கான நிபந்தனைகளை விதிக்காமல் பாரம்பரிய முறையில் மஞ்சுவிரட்டு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரிய மஞ்சுவிரட்டு பாதுகாப்பு நலச் சங்க செயலாளர் முருகானந்தம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் காளைகளை கொண்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, எருது விடும் விழாக்கள் நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டுக்கும் தனி பாரம்பரிய வரலாறு உள்ளது.
ஜல்லிக்கட்டில் ஒரு நேரத்தில் ஒரு மாடு மட்டுமே அவிழ்க்கப்படும். 100 மீட்டர் தொலைவைத் தாண்டிய காளைகளை யாரும் தொடக்கூடாது. ஆனால், மஞ்சுவிரட்டில் ஒரே நேரத்தில் 5 முதல் 10 காளைகள் திறந்த வெளியில் அவிழ்க்கப்படும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுகளை ஜனவரி முதல் மே மாதம் வரை அரசிதழில் உள்ள கிராமங்களில் நடத்தலாம் என விதி உள்ளது. அதே விதிகளை மஞ்சுவிரட்டுக்கும் விதிப்பதை ஏற்க முடியாது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனி பாரம்பரிய வரலாறு உள்ளதால், அந்த பாம்பரிய வராலற்றின் அடிப்படையில் தான் அந்த விளையாட்டுகளை நடத்த வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் புதிய விதிகளை புகுத்தி, மேற்கத்திய பாணியில் விளையாட்டை மாற்றுவது அடிப்படை பாரம்பரிய உரிமைகளை மீறும் செயலாகும். எனவே, ஜல்லிக்கட்டுக்கான விதிகள் மஞ்சுவிரட்டுக்கும் பொருந்தும் என்ற நிபந்தனையை நீக்கி, மஞ்சுவிரட்டை மேற்கத்திய வழக்கங்கள், விதிகள், அரசின் தலையீடு இல்லாமல் அதற்கான பாரம்பரிய முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியகிளாட் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக தமிழக கால்நடைத் துறை செயலர், கூடுதல் செயலர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.