தமிழகம்

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் மேல் விசாரணை கோரி மனு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு  

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு, ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத் துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட அரசுத் துறை நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 33 பேரிடம் ரூ.3 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி புகார்தாரரான நல்லதம்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடம் ரூ.70 லட்சம் வரை திருப்பி கொடுத்துள்ள ராஜேந்திர பாலாஜி, அவர்களிடம் தனக்கு எதிரான வாக்குமூலத்தை மாற்றி சொல்ல வேண்டுமென மிரட்டல் விடுத்து வருகிறார்.

இது தொடர்பாக தகுந்த ஆதாரங்களுடன் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்தாண்டு மே மாதம் புகார் அளித்தும், எந்த விசாரணையும் நடத்தவில்லை. எனவே நான் அளித்துள்ள மனு மீது மேல் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்,' எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், இதுதொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT