மதுரை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சிவமுருக ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ஆதார் அட்டை ஒவ்வொரு நபருக்குமான தனிப்பட்ட அடையாளம். ஆதாரில் ஒருவரின் முழு அடையாளங்களான கைரேகை, புகைப்படம், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, வேறு நபர் ஒருவரின் ஆதார் அட்டை தொடர்பாக எந்த முறைகேடும், செய்ய இயலாது.
தமிழகத்தில், உணவு மற்றும் பொது விநியோகத் துறை, உள்ளாட்சித் துறை, நிதிச் சேவைத் துறை உள்ளிட்ட துறைகளில் ஒரு நபரின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்கவும், மோசடி பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும் பல்வேறு வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமான வாக்குரிமையை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது. எம்.பி., எம்எல்ஏ, உள்ளாட்சி தேர்தல் காலத்தில் ஒவ்வொரு குடிமகனின் வாக்கையும் பெற வாக்காளர் அடையாள அட்டை அவசியமான ஆவணமாகும்.
எனவே, முறைகேடுகளை தடுக்கும் வகையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க உத்தரவிட வேண்டும்,’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ. டி.மரிய கிளாட் அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆகவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.