தமிழகம்

ஈஷா யோக மையத்துக்கு எதிரான புகார் - காவல்துறை விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: கோவை ஈஷா யோக மையத்துக்கு எதிரான புகாரை விசாரிக்க கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக காவல்துறையிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் கோவை மாவட்ட போலீஸார் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் ஈஷா யோக மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாருக்கு ரசீதும் வழங்கவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை.

லலிதா குமாரி- உத்தரப்பிரதேச அரசு வழக்கில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக தகவல் தெரிந்த நபர் உடனடியாக புகார் அளிக்க வேண்டும், அதன் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, எனது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழக காவல்துறை தலைவர் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து ஈஷா யோக மையத்தில் நடைபெற்று வரும் பாலியல் குற்றங்கள், விதிமீறல்கள் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக தகவல் தெரிந்த நபர் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் அதன் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் அண்ணாநகர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என வாதிட்டபட்டது. இதையடுத்து நீதிபதி, “வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க” அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT