சிவகங்கை: சிவகங்கை திருப்பத்தூரில் தவெக கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிவகங்கை திருபத்தூர் தவெக நிர்வாகி செல்லமாணிக்கம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்பத்தூர் காந்தி சிலை, மற்றும் அண்ணா சிலை அருகில் தமிழக வெற்றிக் கழக கொடிக் கம்பம் நிறுவ முடிவு செய்துள்ளோம். நாங்கள் கட்சிக் கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரும் அதே இடத்தில் அதிமுக., தேமுதிக., விசிக, நாம் தமிழர், காங்கிரஸ், திமுக., பாஜக என பல அரசியல் கட்சிகளின் நிரந்தரமாக கொடி கம்பங்கள் உள்ளன.
இந்த இரண்டு இடங்களும் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இடங்களில் தமிழக வெற்றிக் கழக கொடிக் கம்பத்தை நடுவதற்கான அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தோம். ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் அரசியல் மற்றும் சாதி அமைப்பு கொடிகளை நடுவதற்கு அனுமதி இல்லை என அனுமதி மறுத்து விட்டனர்.
மற்ற கட்சிகளின் கொடிக்கம்பங்கள் உள்ள நிலையில் எங்கள் கட்சி கொடி நடுவதற்கு அனுமதி மறுத்த நெடுஞ்சாலை துறையின் உத்தரவை ரத்து செய்து, இரண்டு இடங்களிலும் தமிழக வெற்றிக்கழக கொடி கம்பம் நடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. நெடுஞ்சாலை துறை தரப்பில், "நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் கட்சி கொடிகள் நடுவதற்கு அனுமதி வழங்க எதிர்ப்பு" தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, தவெக கொடி கம்பம் நடுவதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.