விஜயபாஸ்கர் | ஜெயலலிதா | கோப்புப் படம் 
தமிழகம்

நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ள விஜயபாஸ்கர் தொடர்பான விபரங்கள் ரத்து: ஐகோர்ட்

கி.மகாராஜன்

மதுரை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான விபரங்களை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கடந்த 2013 முதல் 2021-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றினேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 2022 ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் என் மீது எவ்விதமான சட்ட அடிப்படையும் இல்லாமல் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சாட்சியாக என்னை விசாரணை ஆணையம் அழைத்துவிட்டு, என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே ஆறுமுகம் சுவாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்தி 39.1, 39.7, 47.28 ஆகியவற்றுக்கும், அந்த பத்திகளை யாரும் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் ஆறுமுகம் சுவாமி ஆணையத்தின் அறிக்கையில் எனது பெயரை பயன்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்களை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம், "நீதிபதி ஆறுமுகசாமி, ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கும், அதனை பயன்படுத்தவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் நீதிபதி இளைந்திரையன், "ஆறுமுகசாமி, ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் விபரங்களை ரத்து செய்து இன்று உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT