தமிழகம்

அகவிலைப்படி உயர்வுக்கு காத்திருக்கும் போக்குவரத்து ஊழியர்கள்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டுமென போக்குவரத்து ஓய்வூதியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். போக்குவரத்துக் கழகங்களில் குடும்ப ஓய்வூதியம் பெறும் 20 ஆயிரம் பேர் உட்பட 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டபோதும், ஓய்வூதியர்களுக்கு அந்த பலன் கிடைப்பதில்லை.

இது தொடர்பாக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியபோதும், அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு மறுத்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளில், அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிட்டபோதும், அடுத்தடுத்து மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தப்படுகிறது. கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற தொடர் மேல்முறையீட்டுகளால் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்திருப்பதாகவும், மாதம் ரூ.7 ஆயிரம்இழந்து வருவதாகவும் ஓய்வூதியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது மட்டுமின்றி, அவர்களுக்கு மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை. சொற்ப ஓய்வூதியத்தைவைத்து, மருத்துவ செலவைக்கூட சமாளிக்க முடியவில்லை என அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன் கூறியதாவது: விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் செலவை ஈடு செய்ய, அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அகவிலைப்படியாக வழங்குவது வழக்கம். இந்த தொகை அவ்வப்போது உயர்த்தப்படும்.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இதுபோலவே மின்வாரியத்திலும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற மின் வாரிய தொழிற்சங்கத்தினர், இது தொடர்பான உத்தரவுக்கு தடை பெற்றனர்.

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அரசின் உத்தரவை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடியுள்ளோம். ஆனால், அரசு தொடர்ந்து மேல்முறையீடு செய்கிறது. அதேநேரம், மின்வாரியத்தில் ஊழியர்களுக்கான ஊதியமும், ஓய்வூதியமும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை போக்குவரத்துக் கழகங்களில் செயல்படுத்த அரசு மறுக்கிறது. அறக்கட்டளை மூலமாகவே ஓய்வூதியம் வழங்கப்படும் என்கின்றனர்.

அறக்கட்டளை தொடங்கியபோது பணியில் இருந்த பெரும்பாலான ஊழியர்கள் இப்போது ஓய்வூதியர்களாகிவிட்டனர். எனவே, இருப்புத் தொகை குறையுமே தவிர அதிகரிக்காது. இதை உணர்ந்து, ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும். வரும் 22-ம் தேதி சென்னையில் மையக் குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT