செம்பரம்பாக்கம் | கோப்புப்படம். 
தமிழகம்

மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

இரா.நாகராஜன்

திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை பெய்தது. இம்மழையால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில், புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதில், இன்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 302 கன அடி, பூண்டி ஏரிக்கு 280 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 250 கன அடி, சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 35 கன அடி என, நீர் வரத்து உள்ளது.

ஆகவே, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 3,158 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,325 மில்லியன் கன அடியாகவும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 366 மில்லியன் கன அடியாகவும் உள்ளது; 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது என, நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT